பெண்களிடையே பி.காம் படிப்புக்கு அதிகரித்த மவுசு; AISHE ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

இளங்கலை அறிவியல் (B.Sc.) படிப்பில் பாலின இடைவெளி சரிசெய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக, வணிகவியல் இளங்கலை (பி.காம்) படிப்பில் ஆண்கள் சேர்க்கப்பட்டதைப் போலவே அதிகமான பெண்களும் சேர்ந்துள்ளனர் என்று அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்பின் All India Survey on Higher Education (AISHE) முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 90 பெண்கள் பி.காமில் சேர்க்கப்பட்டனர். 2019-20ஆம் ஆண்டில் இந்தப் பாடத் திட்டத்தில் ஒவ்வொரு 100 ஆண் மாணவர்களுக்கும் 100 பெண்கள் இருந்தனர். முழுமையான எண்ணிக்கையில், 2019-20 ஆம் ஆண்டில், பி.காமில் 41.6 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 20.3 லட்சம் பெண்கள் மற்றும் 21.3 லட்சம் ஆண்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலின பேதத்தைத் தாண்டிய மூன்றாவது பெரிய படிப்பு பி.காம்.


College students - Representational Image

2017-18-ம் ஆண்டில் பி.எஸ்ஸி மற்றும் எம்பிபிஎஸ் படிப்புகளில் பாலின இடைவெளி குறைந்தது. அப்போதிருந்தே பெண்கள் இளங்கலை அறிவியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

2017-18-ம் ஆண்டில், பி.எஸ்ஸியில் ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 100 பெண்களும், இளங்கலை மருத்துவத்தில் ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 101 பெண்களும் இருந்தனர். இது இப்போது பி.எஸ்ஸியில் 100 ஆண்களுக்கு 113 பெண்களாகவும், இரண்டு ஆண்டுகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் 100 ஆண்களுக்கு 110 பெண்களாகவும் அதிகரித்துள்ளது.

ஆண் ஆதிக்கம் செலுத்தும் படிப்புகளில் மாணவர் சேர்க்கையின் பாலின அமைப்பு வேகமாக மாறுகிறது. இன்னும் அதிக அளவு பெண்கள் உயர் கல்வியில் நுழைகிறார்கள். ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு 100 ஆண் மாணவர்களுக்கும், பெண்களின் எண்ணிக்கை 2015-16ல் 86-ல் இருந்தது, 2019-20-ல் 96 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio - ஜி.இ.ஆர்) 2015-16ல் 24.5 சதவிகிதத்திலிருந்து 2019-20ல் 27.1 சதவிகிதமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த மாற்றத்தின் குறிப்பிடத்தக்க பகுதி பெண்கள் தரப்பிலிருந்து வருகிறது.

Degree

ஆண்களுக்கான ஜி.இ.ஆர் கடந்த ஐந்து ஆண்டுகளில் 25.4 சதவிகிதத்திலிருந்து 26.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பெண்களில் இந்த அதிகரிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. 2015-16ல் 23.5 சதவிகிதத்திலிருந்து 2019-20ல் 27.3 சதவிகிதமாக!

ஜி.இ.ஆர் என்பது இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி அளவிலான படிப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கான அகில இந்திய புள்ளிவிவரக் குறியீடு. மேலும் இது 18-23 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் ஒரு சதவிகிதமாக வெளிப்படுகிறது.

சில படிப்புகளில் பெண் பங்கேற்புக்கான ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தாலும், மேலும் பல படிப்புகளில் இன்னும் நிறைய பெண்கள் சேர வேண்டியிருக்கிறது. உதாரணமாக, பி.டெக் படிப்புகளில், ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் வெறும் 42 பெண்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இளங்கலை சட்டப் படிப்புகளில், இது 100 ஆண்களுக்கு 53 பெண் மாணவர்களே.

2019-20ல் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை 3.85 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 3.74 கோடியாக இருந்தது. அப்படியானால் 3.04 சதவிகித வளர்ச்சி மட்டுமே. 2014-15-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.42 கோடியாக இருந்தது.

Education (Representational Image)

3.85 கோடி மாணவர்களில், 3.06 கோடி இளங்கலை அளவில் படிக்கின்றனர். இது மொத்த சேர்க்கையில் 79.5% ஆகும். அதன் பிறகு, 43.1 லட்சம் மாணவர்கள் அல்லது 11.2% பேர் முதுகலைப் படிப்புக்கும், 2.02 லட்சம் பேர் பி.ஹெச்டி ஆய்விலும் ஈடுபடுகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, பொறியியல் தவிர மற்ற முக்கிய துறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளங்கலை அளவில், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கடந்த ஆண்டு 38.5 லட்சத்திலிருந்து 37.2 லட்சமாகக் குறைந்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், சிவில் இன்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் மைனிங் இன்ஜினீயரிங் ஆகிய துறைகளில்தான் இந்தச் சரிவு அதிகம் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 220 பொறியியல் கல்லூரிகளில், 110-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நல்ல உள்கட்டமைப்பு உள்ளது. இந்தக் கல்லூரிகளில் பலதரப்பட்ட புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

முதுகலை படிப்புகளிலும், பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, 1.8 லட்சத்திலிருந்து 1.77 லட்சமாக. இருப்பினும், பொறியியல் ஆய்வுப் படிப்புகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான பொறியியல் முனைவர் பட்டங்கள் (41,869 முதல் 52,478 வரை) உருவாகி வருகின்றன.

students

உலகத் தரவரிசையில் இந்திய நிறுவனங்கள் போட்டியிடும் நேரத்தில், நாட்டில் கல்வியின் சர்வதேசமயமாக்கலில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை. வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் ஓரளவே முன்னேற்றம் கண்டுள்ளோம். 2018-19ல் 47,427, 2019-20ல் 49,348... இப்படி. வெளிநாட்டு மாணவர்களில் அதிக பங்கு அண்டை நாடுகளிலிருந்தே வருகிறது. இதில் நேபாளம் 28.1%, ஆப்கானிஸ்தான் 9.1%, வங்கதேசம் 4.6%.

1,019 பல்கலைக்கழகங்கள், 39,955 கல்லூரிகள் மற்றும் 9,599 முழுமையான நிறுவனங்களின் பதில்களின் அடிப்படையில் AISHE ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. நாட்டில் மொத்தம் 1,043 பல்கலைக்கழகங்கள், 42,343 கல்லூரிகள் மற்றும் 11,779 தனி கல்வி நிறுவனங்கள் உள்ளன.

- எஸ்.சங்கீதா