தமிழகத்தில் ஜூன் 8 முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி? உண்மை நிலவரம் இதுதான்!
தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு வருகிற ஜூன் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜூன் 8 முதல் பேருந்து பொதுப்போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மையை இப்பதிவில் காணலாம்.
பேருந்து பொதுப்போக்குவரத்து:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் வார நாட்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் அனைத்து வகையிலான பேருந்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மே 24 முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டது.
முனகளப் பணியாளர்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஜூன் 7 வரை அமலில் இருந்த முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு அதிகளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 8 முதல் தமிழகத்தில் பேருந்து பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான செய்தி. தமிழக அரசின் அறிவிப்பின் படி, பேருந்து பொதுப்போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டு உள்ள தடை ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இவ்வாறான அதிகாரபூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.