13 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு :

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறும்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

யாஸ் புயல் கரையைக் கடந்ததால் தமிழகத்தில் வறண்ட காற்று நுழைகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை மேலும் உயரும்

நேற்றைய தினமே தமிழகம் முழுவதும் 12 பகுதிகளில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவானது. இந்த வெப்பநிலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலும் தற்போது வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் அங்கு மழை குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் மே 31ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.