அரசுப் பள்ளியில் கம்பால் அடித்த ஆசிரியை! 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எலும்பு முறிவு - போலீஸ் விசாரணை!

 

வீரகேரளம்புதூர்: தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் சத்தம் போட்டதாகக் கூறி 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஆசிரியை கம்பால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல மாணவர்களுக்குக் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வகுப்பறையில் சத்தம் போட்டதாகக் கூறி தாக்குதல்

வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பிற்குப் பாடம் நடத்தி வருபவர் ஆசிரியை தேன் மரிய சுகந்தி. கடந்த வாரம், 10-ஆம் வகுப்பு வகுப்பறையில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை தேன் மரிய சுகந்தி, அங்கிருந்த மாணவ, மாணவிகள் அனைவரையும் கைகளை நீட்டச் சொல்லி மரக்கம்பால் சரமாரியாக அடித்துள்ளார்.

10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்: மருத்துவமனையில் சிகிச்சை

ஆசிரியை தாக்கியதில் மாணவிகள் சுஜித்ரா, பவித்ரா, சரண்யா, சாய் ஸ்ரீ, ஆஷா, சந்தன முத்துமாரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கைகளில் பலத்த காயமடைந்தனர்.

  • மாணவி பவித்ரா: வீ.கே.புதூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெறப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.
  • மாணவி சுஜித்ரா: ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார்.
  • மற்ற மாணவர்கள்: அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெற்றோரின் குற்றச்சாட்டு:

ஆசிரியை அடித்ததில் மாணவர்களின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கைகள் வீங்கிய நிலையில் உள்ளதால் அவர்களால் எழுதவோ, அன்றாட வேலைகளை செய்யவோ முடியாமல் பள்ளிகளுக்குச் செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகப் பெற்றோர் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் ஆசிரியை மீது வழக்கு!

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி பவித்ராவின் தாய் ராஜாரத்தி, வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் ஆசிரியை தேன் மரிய சுகந்தி மீது வழக்குப் பதிவு செய்த வீ.கே.புதூர் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.