அண்ணா பல்கலைக்கழகம் ஷாக் தகவல். 1 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த வேண்டிய பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. பின்னர் செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வாயிலாக நடத்தப்பட்டது. இதில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 11ஆம் தேதி வெளியிட்டது. பலரது முடிவுகளில் தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடாமல், 'நிறுத்திவைப்பு' என்பதை குறிக்கும் விதமாக WH (With held) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக அண்ணா பல் கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், “பொறியியல் மாணவர்களுக்கு இணைய வாயிலாக 60 மதிப்பெண்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதும் மாணவர்கள் தலையை அசைக்கக் கூடாது, அறையில் எவ்வித சத்தமும் கேட்கக் கூடாது, மாணவர்களின் அருகில் யாரும் இருக்கக் கூடாது உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாக பின்பற்றாதவர்கள் முறைகேடாக தேர்வு எழுதியவர்களாகக் கருதப்படுவர்.

சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். தவிர தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் போன்ற காரணங்களால் சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்” என்றனர்.