தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் நாளை நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் இந்த பணியினை கண்டிப்பாக ஏற்கவேண்டாம் -தேர்தல் கமிஷன் :

பூத் ஏஜென்ட் பொறுப்புகளை ஏற்க வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், நாளை மாநிலம் முழுதும் ஒரே கட்டமாக நடக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஓட்டு சாவடி அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, தபால் ஓட்டுகளும் வழங்கப்பட்டன.ஆனால், சில ஆசிரியர்கள் கட்சிகளுக்கு ஆதரவாக தபால் ஓட்டை பதிவு செய்து, முகநுாலில் பிரசாரம் செய்ததாகவும், பண பட்டுவாடா செய்ததாகவும் புகார் எழுந்தது. இதில், இரண்டு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

அதேபோல, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சிலர், தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளதாக, அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, 'தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. பாரபட்சமாக செயல்பட்டால், சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்தனர்.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர், தேர்தல் பணியை புறக்கணித்து விட்டு, 'பூத் ஏஜென்ட்' பணிகளில் ஈடுபட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கும், மாவட்ட ரீதியாக ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் எந்த வித கட்சி சார்புமின்றி செயல்பட வேண்டும். அரசு பணியில் இருந்து கொண்டு, கட்சிகளுக்கு ஆதரவான பூத் ஏஜென்ட் பணிகளையும் ஏற்க கூடாது என, மாவட்ட கல்வி அலுவலர்கள், 'வாட்ஸ் ஆப்' வழியே அறிவுறுத்தியுள்ளனர்.